படம்: மூன்று முடிச்சு
பாடல்: கவியரசர் கண்ணதாசன்
பாடியவர்கள்: ஜெயச்சந்திரன்+வாணிஜெயராம்
ஆண்:
ஆடி வெள்ளி தேடி உன்னை
நானடைந்த நேரம்
கோடி இன்பம் நாடி வந்தேன்
காவிரியின் ஓரம்
பெண்:
ஓரக் கண்ணில் ஊறவைத்த
தேன் கவிதைச் சாரம்
ஓசையின்றிப் பேசுவது
ஆசை என்னும் வேதம்
ஆண்:
வேதம் சொல்லி மேளமிட்டு
மேடை கண்டு ஆடும்
மெத்தை கொண்டு தத்தை ஒன்று
வித்தைபல நாடும்
பெண்:
நாடும் உள்ளம் கூடும் எண்ணம்
பேசும் மொழி மெளனம்
ராகம் தன்னை மூடி வைத்த
வீணை அவள் சின்னம்
ஆண்:
சின்னம் மிக்க அன்னக்கிளி
வண்ணச் சிலைக் கோலம்
என்னை அவள் பின்னிக் கொள்ள
என்று வரும் காலம்!
பெண்:
காலம் இது காலம் என்று
காதல் தெய்வம் பாடும்
கங்கை நதி பொங்கும் - கடல்
சங்கமத்தில் கூடும்
சங்கமத்தில் கூடும்
4 comments:
என்னை கிறங்க வைக்கும் ஒரு சில பாடல்களில் இதுவும் ஒன்று.
அருமையான கவியரசரின் பாடல்.
பிசிறடிக்காத அழகான குரல், காதை கிழிக்காத ரம்யமான இசை, இயற்கையான சூழல்..... என்ன ஒரு அற்புதமான பாடல்!!!
அந்தாதி அருமை..அளவிலா ஆனந்தம்..அணிகளும் சிறப்பு..!
Post a Comment