படம்-பூவா தலையா
பாடியவர்-T.M.சௌந்தரராஜன்
இசை-எம்.எஸ்.விஸ்வநாதன்
பாடலாசிரியர்-கவிஞர் வாலி
http://www.raaga.com/getclip.asp?id=999999026690
மதுரையில் பறந்த மீன்கொடியை
உன் கண்களில் கண்டேனே..
போரில் புதுமைகள் புரிந்த சேரன் வில்லை
உன் புருவத்தில் கண்டேனே..
தஞ்சையில் பறந்த புலிக்கொடியை
உன் பெண்மையில் கண்டேனே..
இவை மூன்றும் சேர்ந்து தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே..உன்னை
தமிழகம் என்றேனே..
(மதுரையில்..)
காஞ்சித்தலைவன் கோவில் சிலைதான்
கண்மணியே உன் பொன்னுடலோ..
குடந்தையில் பாயும் காவிரி அலைதான்
காதலியே உன் பூங்குழலோ..
சேலத்தில் விளையும் மாங்கனிச் சுவைதான்
சேயிழையே உன் செவ்விதழோ..
தூத்துக்குடியின் முத்துக் குவியல்
திருமகளே உன் புன்னகையோ
திருமகளே உன் புன்னகையோ..
(மதுரையில்..)
பொதிகை மலையில் புறப்படும் தென்றல்
இளையவளே உன் நடையழகோ..
புதுவை நகரில் புரட்சிக் கவியில்
குயிலோசை உன் வாய் மொழியோ..
கோவையில் விளையும் பருத்தியில் வளரும்
நூலிழைதான் உன் இடையழகோ..
குமரியில் காணும் கதிரவன் உதயம்
குலமகளே உன் வடிவழகோ..
இவை யாவும் ஒன்றாய் தோன்றும் உன்னை
தமிழகம் என்றேனே..
(மதுரையில்..)
14 comments:
இப்பாடலைப் பற்றி இன்னொரு சேதி. சமீபத்தில் 1969-ல் இப்படம் சென்னை தியேட்டர்களில் வெளியிட்ட போது இப்பாடல் அதில் இடம் பெறவில்லை. கடைக்கு வந்த ராஜஸ்ரீயை வழியனுப்பி விட்டு ஜெமினி கணேசன் தன் அறைக்கு வந்து சோஃபாவில் விழுவார். உடனே காட்சி மாறி விடும், இப்பாடல் வராமலேயே.
ஆனால் இப்போது தொலைக்காட்சியில் இப்படம் ஒளிபரப்பப்பட்டால் இப்பாடல் நிச்சயம் உண்டு.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சொக்கன், ஹரன்பிரசன்னா, டோண்டு
உங்கள் கருத்துக்களுக்கும், தந்த தகவல்களுக்கும் நன்றி.
பாடலாசிரியர் வாலியா? சுரதாவா? கண்ணதாசனா?
நல்ல பாடல். மிகவும் நல்ல பாடல்.
கவிஞர் கண்ணதாசன் என நினைவு. ஆனால் சரியாகத் தெரியவில்லை.
இந்தப் பாடல் படத்தில் இடம் பெறவில்லையா? என்ன காரணத்தினால்?
சந்திரவதனா!
இப்பாடலாசிரியர் வாலி என்றே எனக்கும் ஞாபகம். ஒருகாலத்தில் நான் அதிகம் பாடித்திரிந்த பாடலிது.
நன்றி!
தயவு செய்து உங்கள் மின்னஞ்சல் பார்க்கவும்
வாலி இப்பாடல் ஆசிரியர் என்றால்
காஞ்சித் தலைவன் அண்ணா,
புரட்சிக் கவி பாரதிதாசன் என்று
வருகிறது. 60களில் திராவிட இயக்கப்
பாடல்களை வாலி பாடினாரா?
நா. கணேசன், ஹ்யூஸ்டன், டெக்சாஸ்
றாகவன், மலைநாடான், நா.கணேசன்
உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
வாலியா, கண்ணதாசனா, வாலி 60களில் திராவிட இயக்கப் பாடல்களைப் பாடினாரா என்பதெல்லாம்
யாராவது தெரிந்தவர்கள் சொன்னால்தான் எனக்கும் தெரியும்.
இப்பாடல் குறித்து நான் அறிந்த ஒரு தகவல்.
எம்.ஜீ. ஆருக்கும், கண்ணதாசனுக்குமிடையில் கருத்து வேறுபாடு தோன்றியிருந்த காலத்தில், எம்ஜீஆரின் கவனத்தைப் பெற, வாலி எழுதிய பாடலிது எனக் கேள்விப்பட்டதுண்டு. அதை வைத்தே வாலி எழுதிய பாடல் எனக் குறிப்பிட்டேன். மற்றும்படி வாலி 60 களில் திராவிட இயக்கப்பாடல் பாடினாரா என்பது எனக்கும் தெரியவில்லை.
நன்றி!
தகவலுக்கு நன்றி மலைநாடான்.
இந்த பாடலை மட்டுமல்ல
பூவா தலையாவில் அனைத்துப்பாடல்களை இயற்றியதும் கவிஞர் வாலி அவர்கள்
ராஜேஸ்,
தகவலுக்கு நன்றி.
மாற்றியுள்ளேன்.
அன்பின் சந்திரவதனா,
உங்களின் ஆக்கங்களைப் பல இடங்களிலும் படித்து மெளனமாக ரசித்து வருபவன் நான். முதலாவதாக உங்களின் அருமையான முயர்ஸிக்கும், அற்புதமான இழைக்கும் எனது பாராட்டுக்கள்.
இந்தப்பாடல் நிச்சயமாக கவிஞர் வாலி அவர்கள் இயற்றிய பாடலே தான்.
அன்புடன்
சக்தி சக்திதாசன்
அன்பின் சந்திரவதனா,
முதலாவதாக உங்களது அற்புதமான இழைக்கு எனது உளங்கனிந்த பாராட்டுக்கள்.
உங்களது ஆக்கங்களை பல்காலமாக ரசித்து வருபவன் நான்.
இந்தப்பாடல் நிச்சயமாக கவிஞர் வாலியினால் இயற்றப்பட்டதே.
அன்புடன்
சக்தி சக்திதாசன்
அன்பின் சந்திரவதனா,
2006-க்குப் பின் மீண்டும் தொடர்பு கொள்கிறேன். இப்பாடல் ஒரிஜினல் எம்பி3 அனுப்ப முடியுமா? கிராமபோன் ரிக்கார்டில் கேட்டு எழுதியிருப்பீர்கள் என நினைக்கிறேன்.
கோவையில் விழையும் - கோவையில் விளையும் எனத் திருத்திவிடுங்கள்.
உங்கள் மின்னஞ்சல் முகவரி என்ன? நன்றி.
நா. கணேசன் ( naa.ganesan[AT]gmail.com )
Post a Comment