23.4.06

பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி

படம் : துலாபாரம்
குரல் : டி.எம்.எஸ்., சுசீலா
பாடல் : கண்ணதாசன்
இசை : ஜி.தேவராஜன்
நடிகர்கள் : ஏவிஎம்.ராஜன், சாரதா


பூஞ்சிட்டுக் கன்னங்கள் பொன்மணி தீபத்தில்
பால் பொங்கல் பொங்குது பன்னீரிலே
பொங்கல் பிறந்தாலும் தீபம் எரிந்தாலும்
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே - இந்த
ஏழைகள் வாழ்வது கண்ணீரிலே

(பூஞ்சிட்டு)

செல்வர்கள் இல்லத்தில் சீராட்டும் பிள்ளைக்குப்
பொன் வண்ணக் கிண்ணத்தில் பால் கஞ்சி
கண்ணீர் உப்பிட்டுக் காவேரி நீரிட்டு
கலயங்கள் ஆடுது சோறின்றி
இதயங்கள் ஏங்குது வாழ்வின்றி

கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..

(பூஞ்சிட்டு)

மாணிக்கத் தேர் போல மையிட்டுப் பொட்டிட்டு
மகராஜன் செல்வங்கள் விளையாடும்
கண்ணாடி வளையலும் காகிதப் பூக்களும்
கண்ணே உன் மேனியில் நிழலாடும்
இல்லாத உள்ளங்கள் உறவாகும்

கண்ணுறங்கு கண்ணுறங்கு..
பொன்னுலகம் கண்ணில் காணும் வரை
கண்ணுறங்கு கண்ணுறங்கு..

(பூஞ்சிட்டு)

3 comments:

பாரதிய நவீன இளவரசன் said...

வருமையின் கொடுமையை படம் பார்ப்பவரின் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்தும் படம். கல்நெஞ்சக்காரனையும் கரைய வைக்கும் கண்ணீர்க் காவியம். படத்தின் முடிவு ஞாபக இருக்கிறதா...மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தற்கொலைக்கு முற்படும் அபலைத் தாயின் சோகம்...

மலையாளப் படத்தினை இந்திய தேசிய அரங்கில் கவனைத்தை ஈர்த்த படங்களான நியூஸ் பேப்பர் பாய், செம்மீன் வரிசையில் வருகிறது துலாபாரம். அடிப்படையில், தோப்பில் பாஸியின் நாடகம் தான்; திரை வடிவம் தந்தவர் A. வின்சென்ட்.

தமிழ் மற்றும் பிற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது. சாரதாவிற்கு தேசிய விருது பெற்றுத் தந்த படம்.

மலையாள இசை அமைப்பாளர் தேவராஜனின் ஜீவனுள்ள சங்கீதத்தில், இந்தப் பாடலை எப்போதெல்லாம் கேட்க நேர்கிறதோ, அப்போதெல்லாம், என்னை இனம் புரியாத சோகம் ஒன்று கவ்விச் செல்லும்....

அதிகார வர்க்கத்தின் திமிர், ஏழ்மையின் கொடுமை, படித்த நடுத்தர வர்க்கத்தின் சமுக அக்கறையின்மை, தொழிலாளர் படும் துயர்......பல உண்மைகளை உலகுக்கு உரைக்கிறது இப்படம்.

எனது டாப் 10 படவரிசையில் இடம் பெற்றிருக்கவேண்டிய படம். இடம் பெறாமற்போனதற்கு காரணம் சொல்லவேண்டுமால், இது ரீமேக் படம் என்ற காரணத்தினையும், மலையாளத்தில் இதைவிட சிறந்ததாக இருந்ததையும் சொல்லலாம்...

இருந்தும், நெஞ்சில் நிற்கும் இப்பாடலுக்கு என்னவோ...நமது சங்கீதச் சேகரிப்பில் எப்போதும் இடமுண்டு.

வெங்கடேஷ் வரதராஜன்,
ரியாத்.

G.Ragavan said...

மிகவும் அருமையான பாடல். ஒரு மகிழ்ச்சியான ஏழைக் குடும்பத்தைக் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தும் பாடல். பி.சுசீலாவும் டீ.எம்.எஸ்சும் மிக அருமையாக பாடியிருக்கிறார்கள். ஜி.தேவராஜனையும் கவியரசரையும் பற்றிச் சொல்லத் தேவையேயில்லை.

Chandravathanaa said...

பாரதி, ராகவன், யோகன்

உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
பாடசாலைப் பருவத்தில் இப்பாடலைக் கேட்கும் போதெல்லாம் சோகம் மனசில் அப்பிக் கொள்ள
அழுகை வந்து விடும். கோகிலாம்பாள் கதையும் நினைவில் வரும்.

வெங்கடேஷ் வரதராஜன்,
பல தகவல்களைத் தந்துள்ளீர்கள். நன்றி.